Skip to content

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை

  • by Authour

சமீப நாட்களாகவே தமிழகம் முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்றைய தினம் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (சனிக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 25ம் தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, இன்று, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும், தமிழகத்தின் சில இடங்களிலும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை சனிக்கிழமை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

வருகிற திங்கட்கிழமை 24-ந்தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்..

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

25ம் தேதி செவ்வாய்க்கிழமை, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் கணிக்கப்பட்டுள்ளது.” என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வெதர்மேன் வெளியிட்டுள்ள தகவலில், “வங்கக்கடலில் புயல் உருவாகி, அது நகர்ந்தால்தான் எந்த திசையில் அது பயணிக்கிறது என்பது தெரிய வரும். நவ.29 அன்றுதான் அதுகுறித்து தெரியவரும். ஒருவேளை புயல் வலுவானதாக இருந்தால் அது சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மழையும் பெய்யாது. அதுவே, பலவீனமான புயல் எனில் சென்னையில் மழைக்கான வாய்ப்புள்ளது” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!