கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில் முக்கியமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று 18 படிகளை ஏறி நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக நாள்தோறும் காலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க பல மாநிலங்களில் இருந்து கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில் சபரிமலை நடை திறந்த 9 நாட்களில் 9.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் (நவ.24) மட்டும் 1,18,886 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

