சென்னை : இன்று (நவம்பர் 27) காலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக (Cyclone Ditwah) வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவிலும், இலங்கை ஹம்பாந்தோட்டாவிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது.
இன்று மாலைக்குள் இலங்கை கரையை ஒட்டி புயலாக மாறி, பின்னர் வடக்கு தமிழ்நாடு-தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி வரும். இதனால் தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை கனமுதல் மிகக் கனமழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இன்று 27-11-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை 28-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

