சூர்யாவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாத திரைப்படங்களில் அஞ்சான் திரைப்படமும் ஒன்று. இந்த படம் அந்த சமயம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம் ஓவர் பில்டப் செய்த காரணமாக படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனவும் பலர் கூறுவது உண்டு. இதனையடுத்து, பல ஆண்டுகள் கழித்து படத்தை ரீ எடிட் செய்து மீண்டும் படக்குழு ரீ-ரிலீஸ் செய்துள்ளது.
ரீ-எடிட் செய்யப்பட்ட அஞ்சான் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மற்றோரு பக்கம் படத்தின் இயக்குநர் லிங்குசாமி பேட்டிகளில் கலந்துகொண்டு படம் குறித்து பேசியுள்ளார். அப்படி சமீபத்திய ஒரு பேட்டியில் அந்தப் படத்துக்கு வந்த சோஷியல் மீடியா ட்ரோல்களைப் பற்றி திறந்த மனதுடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “சோஷியல் மீடியா ட்ரோலில் சிக்கிய முதல் பெரிய படம் ‘அஞ்சான்’ தான். அப்போது ட்விட்டர் (இப்போதைய X) புதிதாக பிரபலமாக ஆரம்பித்த காலம். ஒரு படத்தை ஓவராக ப்ரொமோஷன் செய்யக்கூடாது என்பதற்கு ‘அஞ்சான்’ உதாரணமாக ஆகிவிட்டது” என்று அவர் கூறினார்.
‘அஞ்சான்’படம் வெளியான பிறகு வந்த ட்ரோல்கள் மிகக் கடுமையாக இருந்தன. என்னைப் பற்றி மட்டுமல்ல, என் குடும்பத்தினர், நண்பர்கள் பற்றியும் தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் நடந்தன. அந்தக் காலகட்டத்தில் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். என் குடும்பமும் நண்பர்களும் ஆதரவாக இல்லாவிட்டால் நான் சினிமாவையே விட்டு வெளியேறியிருப்பேன்” என்று லிங்குசாமி உருக்கமாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “‘அஞ்சான்’ படத்துக்கு வந்த ட்ரோல்களைப் பார்த்து பல இயக்குநர்களும் நடிகர்களும் பாடம் கற்றுக்கொண்டார்கள். அதற்குப் பிறகு படங்களை அதிகமாக ப்ரொமோட் செய்வதில் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு இது எல்லோருக்கும் நடக்கிறது, ஆனால் முதலில் தொடங்கப்பட்டது என்னிடம்தான்” என்று சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார்.‘

