Skip to content

காரைக்குடி அருகே பஸ் விபத்து- 11 பேர் பலி

  • by Authour

சிவகங்கை : மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்பங்குடி பாலம் அருகே நேற்று நடந்த பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், மதுரை நோக்கி சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும் அதிவேகத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் அபாய நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயல்களை அருகிலுள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிலர் அபாய நிலையில் இருப்பதால் சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டனர். உயிரிழந்த 11 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக இந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் கண்ணாடி துண்டுகள் கொட்டி கிடந்ததால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது, போலீஸார் அவற்றை அப்புறப்படுத்தினர்.இந்தப் பரிதாப விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இரங்கல் தெரிவித்தார். தனது X பக்கத்தில், “சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டார்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் கூடுதல் உதவி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!