Skip to content

மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி

  • by Authour

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே ராமநாயினி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் (55) மல்லிகா(50) தம்பதி. விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) என்ற 3 மகன்கள் இருந்தனர். இதில், மூத்த மகன் விகாஷிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. லோகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஜீவா தந்தைக்கு உதவியாக ஊரிலேயே நர்சரி வைத்து பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விடுமுறையில் லோகேஷ் ஊருக்கு வந்திருந்தார். ஜானகிராமன் தனது 3 மகன்களையும் அழைத்துக்கொண்டு நேற்று இரவு வயலுக்கு சென்றுள்ளார். இரவு நேரங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் அவற்றை நோட்டமிடுவதற்காக அங்கு 4 பேரும் தனித்தனியாக பிரிந்து சென்றுள்ளனர். அப்போது ஜானகிராமன் அருகில் இருந்த விவசாய நிலத்தில் வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த மகன்கள் மூவரும் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், தந்தையுடன், விகாஷ் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2வது மகன் லோகேஷ் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பை துண்டிக்கச் செய்தனர். இதனையடுத்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, படுகாயமடைந்த லோகேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன்கள் என 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராமமே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

error: Content is protected !!