முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு பல அணிகளாக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின்பு நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. இதனால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்த நிலையில் அந்த தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது.
இதனால் பாஜகவை விட்டு வெளியேறிய அதிமுக, இனி ஒருபோதும் பாஜக உடன் கூட்டணி வைக்காது என எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்தது. பல்வேறு நிர்பந்தங்கள் காரணமாகவே பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதிமுக மூத்த தலைவர்களும் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவான சின்னசாமி இன்று திடீரென்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதற்காக அண்ணா அறிவாலயம் வந்த அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக உறுப்பினர் அடையாள அட்டையை முதல்வர் வழங்கினார். மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி முயற்சியால் சின்னசாமி திமுக பக்கம் சாய்ந்ததாக தெரிகிறது. சின்னசாமி அதிமுக தொழிற்சங்க செயலாளராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

