பீகார் மாநிலம் புத்தகயாவில் தனியார் ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகள் குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கியிருந்தனர். மணமகன் குடும்பத்தினர் மேள, தாளங்கள் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தனர். அங்கு மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டார் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு மணமகள் – மணமகன் ஆகியோருக்கு திருமணத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டது. அதன்பிறகு மணமகள் வீட்டார் சார்பில் ஹோட்டலில் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. விருந்தில் ரசகுல்லா இடம்பெற்றிருந்தது. ஆனால் ரசகுல்லாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மணமகனின் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது ஹோட்டலில் இருந்த மணமகனின் உறவினர்கள் மற்றும் மணமகளின் உறவினர்கள் ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனை முற்றவே இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
ஹோட்டலில் போடப்பட்டு இருந்த இருக்கைகளை தூக்கி அவர்கள் அடித்து கொண்டனர். அதேபோல் உணவு பரிமாற வைத்திருந்த கரண்டி உள்பட பாத்திரங்களை தூக்கி மாறி மாறி தாக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இளம்ஜோடியின் திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் போலீசில் புகார் செய்துள்ளனர். மணமகன் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக மணமகள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மணமகன் தரப்போ, திருமணத்தை நடத்துவோம் என்று கூறியும் மணமகள் குடும்பத்தினர் கேட்கவில்லை. அவர்கள் தான் திருமணத்தை நிறுத்தி எங்கள் மீது போலியாக புகார் செய்கின்றனர் என்று புகாரளித்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் மணமகன், மணமகள் குடும்பத்தினர் ஹோட்டல் அறையில் சண்டையிட்ட சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

