டெல்லி : நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டிம் சவுதி, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இன்னும் தகுதியானவர்கள்தான் என்று திட்டவட்டமாக ஆதரவு தெரிவித்துள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட இந்த மூத்த ஜோடி, தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. “வயது வெறும் எண்ணிக்கைதான் (age is just a number)” என்று சவுதி வலியுறுத்தினார்.
“விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய சிறந்த பேட்ஸ்மேனாகவே கருதப்படுகிறார். அவர் இன்னும் பெர்ஃபார்ம் செய்கிறார் என்றால் ஏன் வேண்டாம்? ரோஹித் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தார். இருவரும் இன்னும் அணிக்கு பங்களிப்பு செய்கிறார்கள். வயது ஒரு பிரச்சினையல்ல” என்று சவுதி தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கோலி ஏற்கனவே ஒரு சதம் அடித்துள்ளார், ரோஹித் தொடர்ந்து நல்ல ஃபார்மில் உள்ளார்.2027 உலகக் கோப்பை நடைபெற இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில், ரோஹித் (38), கோலி (39) ஆகியோர் அப்போது 40 வயதை நெருங்குவார்கள். இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் சவுதி, “இது அவர்களது தனிப்பட்ட முடிவு. உலகத் தரத்தில் விளையாட தேவையான அனைத்தையும் செய்ய முடியும் என்று அவர்கள் உணர்ந்தால், ஏன் வேண்டாம்?” என்று கேள்வி எழுப்பினார்.
“கோலி போன்ற வீரர் 2027 உலகக் கோப்பைக்கு கிடைத்தால், எந்த அணியும் அவரை விளையாட வைக்க விரும்பும். ரோஹித் தலைமையிலும், கோலியின் அனுபவத்திலும் இந்தியா பலன் பெறும்” என்று சவுதி மேலும் கூறினார். 2023 உலகக் கோப்பை இறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி, 2027-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையை குறி வைத்து தயாராகி வருகிறது. ரோஹித்-கோலி ஜோடி இன்னும் அணியின் முதுகெலும்பாக இருப்பதை சவுதி சுட்டிக்காட்டினார்.
நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் 107 டெஸ்ட், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவருமான சவுதியின் இந்த ஆதரவு, ரோஹித்-கோலி ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “அனுபவம் + தற்போதைய ஃபார்ம் = 2027 உலகக் கோப்பை வெற்றி” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 2027 வரை ரோஹித்-கோலி தொடர்வார்களா என்பது அவர்களது தனிப்பட்ட முடிவாகவே இருக்கும் என்று சவுதி முடிவு செய்துள்ளார்.

