ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வந்த புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் தரையிறங்கியதும் ரஷிய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். பின்னர் புதின் ஓட்டலுக்கு சென்று தங்க உள்ளார். நாளை காலை ஜனாதிபதி மாளிகையில் புதினுக்கு சம்பிரதாய முறைப்படி முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ராஜ்காட்டுக்குச் செல்கிறார். அதன்பின் ரஷிய அதிபர் புதின், ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்துகொள்கிறார்.
இந்த மாநாட்டுக்கு இடையே மோடி-புதின் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். மேலும் அங்கு புதினுக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டு அறிக்கை வெளியிடுகிறார்கள்.

