டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆறுதலாக, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1.19 கோடி மதிப்பிலான 950 டன் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைத்தார். “தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்” என்று எழுதப்பட்ட பேனருடன் கூடிய கப்பலை முதலமைச்சர் தொடங்கி வைத்து, இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுப்பப்பட்ட பொருட்களில் 300 மெட்ரிக் டன் சர்க்கரை, 300 மெட்ரிக் டன் பருப்பு வகைகள், 25 மெட்ரிக் டன் பால் பொடி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், 5,000 புடவைகள்-வேட்டிகள், ஆயிரக்கணக்கான போர்வைகள், துண்டுகள், தார்ப்பாய்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவை அடங்கும். புயலால் வீடுகளை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு உடனடி தேவையான அத்தியாவசியப் பொருட்களே முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் புயலால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன், மின்சாரம், குடிநீர், உணவு ஆகிய அடிப்படை வசதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பே முதலமைச்சர் இலங்கைக்கு நிவாரணம் அனுப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று அதை நிறைவேற்றியுள்ளார்.
இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “தமிழ்நாடு எப்போதும் எமக்கு உற்ற துணையாக இருக்கிறது” என்று இலங்கைத் தமிழ் அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டின் இந்த மனிதாபிமான உதவி, இரு பகுதி தமிழர்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

