Skip to content

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை.. வலைவீச்சு-திருச்சி க்ரைம்

டீக்கடையில் பாய்லர் திருட்டு

திருச்சி புத்தூர் சங்கீதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (52). இவர் அரசு மருத்துவமனை போலீசரகத்துக்கு உட்பட்ட பழைய மீன் கடை தெரு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 5 ந் தேதி டீ கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று டீக்கடையில் இருந்த பாய்லர் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.பிறகு மறுநாள் கடையை திறக்க செல்வம் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து செல்வம் அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்குகிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பெயர் ராஜேஷ் (வயது 38) தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது, இதையடுத்து போலீசார் ராஜேஷ்சை கைது செய்து டீக்கடையில் திருடப்பட்ட பாய்லர் மற்றும் சிகரட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு

திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது வீட்டின் மாடியில் மரகதம் (50) என்பவர் வசித்து வருகிறார்.இவர் ரவிச்சந்திரன் வீட்டில் வீட்டு வேலையும் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ந்தேதி ரவிச்சந்திரன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
இதையடுத்து மேல் மாடியில் இருந்த மரகதம் தனது வீட்டை பூட்டிவிட்டு கீழ் வீட்டில் வந்து ஹாலில் படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து எழுந்து மாடிக்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பிறகு உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருட்டு போயிருக்கிறது தெரிய வந்தது .இந்த சம்பவம் குறித்து மரகதம் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மரகதம் வீட்டில் நகையை திருடிய மர்ம ஆசாமிகள் வலை வீசி தேடி வருகின்றனர்.

டூவீலரில் மது விற்பனை செய்தவர் கைது

ஸ்ரீரங்கம் மூல தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக திருவரங்கம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது 3 பேர் டூவீலரில் மது பாட்டில்களை விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்த போது அதில் இருந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மூலதோப்பு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 33) என தெரியவந்தது. மேலும் அவர் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்க் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து மது பாட்டில்கள், ரூ 11 ஆயிரம் பணம் மற்றும் 2 இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபாகர் (வயது 32) ராஜ்குமார் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!