திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஅர் சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு எதிராக தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. இதேபோன்று மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை நிறுத்தி வைக்க கோரி ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு உள்நோக்கத்துடன் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், பாதுகாப்புக்காக சி.ஐ.எஸ்.எப்-ஐ அழைத்ததில் தவறு இல்லை என்றும் தெரிவித்தனர். தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை அவரே விசாரிப்பார் எனத் தீர்ப்பளித்தனர்.
அதன்படி, திருப்பரங்குன்றம் வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி, மனுதாரரும் அவருடன் 10 பேரும் சேர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் உடனடியாக தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகே அமைந்துள்ள தீபத் தூணில் விளக்கேற்ற கோயில் அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றமான சூழலையடுத்து, நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக நடவடிக்கையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியது திமுக கூட்டணி. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள நில அளவை தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அரசமைப்பு விதிகளின்படி ஒரு நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கத்துக்கு விதி 124 (4) வகை செய்கிறது. இதற்கு மக்களவையில் இருந்து குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும். இந்த குறைந்தபட்ச ஆதரவு எட்டப்பட்டு, தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அது முறையான விசாரணை நிலையை அடையும்.
அதன் பிறகு மூவர் குழு நியமிக்கப்பட்டு, அறிக்கை அளித்தவுடன் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கப்படும். அதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால்தான் அது தொடர்புடைய தீர்மானத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார். எனினும், இந்தியாவில் இதுவரை எந்த ஒரு நீதிபதியும் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

