மறைந்த முன்னாள் அதிமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஸ்மார்ட் சிட்டி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 4 வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திருப்பூருக்கு பெற்று தந்தவர் மறைந்த குணசேகரன். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அவரின் பேச்சை கேட்ட மக்கள் அடுத்த முதல்வர் எடப்பாடி தான் என்று மக்கள் முடிவு செய்துள்ளார்கள். 2026 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்றார்.
தமிழக வெற்றி கழகம் முழுமையான அதிமுகவாக மாறி வருகிறதா என்ற கேள்விக்கு, அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கிறது. உண்மையான எம்ஜிஆர், அம்மா தொண்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். இது போன்ற போலிக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எடப்பாடி பழனிசாமி உழைத்து வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தமிழகத்தில் 175 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்தவர் எடப்பாடியார். அவருக்கு பின்னால் தான் மக்கள் உள்ளார்கள் என தெரிவித்தார்.

