Skip to content

ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் மோசடி

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சாந்தி (31). மதுரவாயலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய வாலிபர் ஒருவர், சாந்தியிடம், “நான் ஆட்டோவில் சவாரி வந்தேன். டிரைவருக்கு ரூ.300 கொடுக்க வேண்டும். கையில் பணம் இல்லை. ரூ.300 கையில் கொடுத்தால் அதனை ‘ஜிபே’யில் அனுப்பி விடுவதாக” கூறினார்.
அதற்கு சாந்தி சம்மதம் தெரிவித்தார். இதனால் தனக்கு ஒரு ரூபாய் அனுப்புமாறு கூறினார். அதன்படி சாந்தியும், வாலிபரின் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பினார். பின்னர் அந்த வாலிபர், அவசரமாக பேச வேண்டும் எனக்கூறி சாந்தியிடம் இருந்து செல்போனை வாங்கி பேசினார்.

சிறிதுநேரம் கழித்து செல்போனை சாந்தியிடம் கொடுத்துவிட்டு தான் வந்திறங்கிய அதே ஆட்டோவில் மீண்டும் ஏறி அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த சாந்தி, செல்போனை பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து வேறொரு வங்கி கணக்கிற்கு ‘ஜிபே’ மூலம் ரூ.14 ஆயிரம் அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி,மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரை சேர்ந்த பரத் (27) என்பவரை கைது செய்தனர்.
சாந்தி, ஒரு ரூபாய் அனுப்பியபோது அவரது ரகசிய எண்ணை பரத் தெரிந்து கொண்டு, செல்போனில் பேசுவதாக கூறி வேறொரு வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியது தெரிந்தது. கைதான பரத்திடம் இருந்து ரூ.9 ஆயிரம், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!