தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினம் யாகப்பா சாவடி பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மகன் சிராஜுதீன்(34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சிராஜுதீன், அம்மாகுளம் பாலம் நெய்வாய்க்கால் பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது அம்மாகுளம் கீழவஸ்தாசாவடி மேலத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரதீப்(29), தனது நண்பர்களுடன் மது போதையில் நெய்வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திக்கொண்டு இருந்த சிராஜுதீன் மற்றும் அவர்களது நண்பர்களிடம் தீப்பெட்டி கொடுக்குமாறு பிரதீப் கேட்டுள்ளார். இதில் பிரதீப், சிராஜுதீன் ஆகியோருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு முற்றவே பிரதீப் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சிராஜுதீனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சிராஜுதீன் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து சிராஜுதீனின் தந்தை கமாலுதீன் அம்மாப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பிரதீப் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாபநாசம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிராஜுதீன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அம்மாப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

