திருப்பத்தூர் பகுதியில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பாக அதிகாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
திருப்பத்தூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பார்வைத் தூரம் குறைந்ததால் சாலைகளில் போக்குவரத்து மெதுவாக நடைபெற்று வருகிறது. வாகன ஓட்டிகள்

முகப்பு விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) ஏற்றி, தொடர்ந்து ஆரம் (ஹாரன்) அடித்தபடியே மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
சாலைகள் முழுவதும் வெள்ளைப் பனி படர்ந்தது போல் காட்சியளித்து, பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பனிப்பொழிவு காரணமாக விவசாய நிலங்களில் குளிர் அதிகரித்துள்ளதால் சில பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலை விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
பனிமூட்டம் தொடரும் நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

