டில்லி இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வேயின் அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கும் நோக்கில் இந்த கட்டண உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில்வே ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
2024-25 நிதியாண்டில் மொத்த செலவு இரண்டு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், குறைந்த அளவிலான பயணிகள் கட்டண உயர்வு மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பது மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த உயர்வில் 215 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. 215 கி.மீ.க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளுக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கி.மீ.க்கு 2 பைசா உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.உதாரணமாக, சென்னையிலிருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் 10 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பயணிக்கும் கட்டணம் 15 ரூபாய் உயரும். புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஜூலை மாதம் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இந்த உயர்வு நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

