சென்னை : பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், நெல்லையில் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனம் வைத்தார். சரத்குமார் கூறியதாவது: “2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஆனால், பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை மாற்றியமைக்க பாடுபடுவேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்கு விட்டுக் கொடுத்து விடுவேன்.
அதனை தொடர்ந்து விஜய் குறித்து அவர் பேசுகையில் ” அவருக்கு நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதே தெரியவில்லை. இதுதான் அவரது அரசியல் புரிதலின் அளவு” என்று குறிப்பிட்டார்.மேலும், “அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் விஜய், தனது நிலைப்பாடுகளை தெளிவாக வைக்காமல், எல்லோரையும் நண்பர்களாகவும் எதிரிகளாகவும் கருதுவது போன்று நடந்து கொள்கிறார். இது தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று சரத்குமார் விமர்சித்தார்.
மேலும், அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பா.ரஞ்சித்தும் மாரி செல்வராஜும் எடுக்கும் திரைப்படங்களுக்கு எதிராக வெளியாகும் விமர்சனங்கள் பற்றியும் பேசினார். இது குறித்து பேசிய அவர் “பா.ரஞ்சித்தும் மாரி செல்வராஜும் சாதி படங்கள் எடுக்கிறாங்கனு சொல்றாங்க. ஹாலிவுட்டுல பாத்தோம்னா.. யூதர்கள் தங்கள என்ன செஞ்சாங்கனு, தாங்கள் அனுபவிச்ச வலிகள இப்பவும் கறுப்பின மக்கள் படமா எடுக்குறாங்க. அந்த வலிய அவங்களோட நினைவுகளிலிருந்து அழிக்க முடியாது.
அதனால நீங்க ஏன் இப்படி படம் எடுக்கிறீங்கனு கேலி பண்ண கூடாது. அவங்க வலிய வெளிப்படுத்துறத நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். படத்த படமா பாருங்க. மாரியோட எல்லா படங்களும் பாத்திருக்கேன். நான் பார்த்ததிலேயே அவர் ஒரு ஆகச்சிறந்த இயக்குநர்” எனவும் பாராட்டி பேசினார்.

