திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ்
( 39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (34). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியின் நகையை அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் அந்த பணத்தை வைத்து வீட்டை குத்தகைக்கு எடுத்தார். பிறகு அடகு வைத்த நகையை மீட்பது தொடர்பாக இருவருக்குள் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 20 ந்தேதி கணவன் மனைவி இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.இதில் ரமணமணி, பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் பிரகாஷ் ரமணமணியை தாக்கி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமணமணி கணவர் என்று பாராமல் பிரகாஷ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் அவருக்கு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து பிரகாஷ் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து ரமணமணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

