சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. “தீரர்கள் கோட்டம் தி.மு.க”, “திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்”, “முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்” ஆகிய நூல்களை வெளியிட்டு வைத்த இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நூல் வெளியீட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தீரர்கள் கோட்டம் தி.மு.க” மற்றும் “திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்” ஆகிய இரு நூல்களை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, “முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்” நூலை கி.வீரமணி வெளியிட, ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சி திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தும் கருத்தியல் தெளிவின் அடையாளமாக உள்ளதால், ஆதிக்கவாதிகளுக்கும் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திராவிடம், திராவிட இயக்கம், திமுக என்றாலே கசக்குவதாக விமர்சித்தார். “நாம் திராவிட மாடல் என்று கூறும்போதெல்லாம் அவர்களுக்கு திரும்பத் திரும்ப எரிகிறது என்றால், நாம் மீண்டும் மீண்டும் திராவிட மாடல் என்று கூறலாம்” என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது, இன்று எப்படி உள்ளது என்பதை ஒப்பிடுகையில், பிற மாநிலங்களைவிட சமூக, பொருளாதார, உட்கட்டமைப்பு வளர்ச்சியில் 20 ஆண்டுகள் முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், இந்த உண்மைகளை மறைக்க முயல்பவர்களுக்கு ப.திருமாவேலனின் நூல்கள் பதிலளிப்பதாகப் பாராட்டினார்.
திமுகவின் பவளவிழா காலத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பதை பெருமையாகக் கூறிய அவர், நூற்றாண்டு விழாவிலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம் என்று உறுதியளித்தார்.கொள்கை பிடிப்பு இல்லாத கட்சிகள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்டுள்ளன என்று சாடிய முதலமைச்சர், மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்றும், திமுக கொடூர அடக்குமுறைகளை எதிர்கொண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடுவதாகவும் தெரிவித்தார். “நாம் சூரியனைப் போல நிரந்தரமான ஒளியை வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

