திருச்சி பழைய பால்பண்ணை வழியாக தஞ்சாவூருக்கு சென்று வரும் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு 01.01.2026 – முதல் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.தினந்தோறும் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் பால்பண்ணை சந்திப்பு வழியாக திருச்சி மாநகருக்குள் வருவதற்கு முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. மேற்படி நேரத்தில் திருச்சி மாநகருக்குள் வருகை தரும் கனரக வாகனங்கள் துவாக்குடி – பஞ்சப்பூர் மார்க்கத்தில் செல்ல வேண்டும்.பஞ்சப்பூர் -தஞ்சாவூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் எல்லா இடைநில்லா பேருந்துகளும் (Point to Point Buses) தஞ்சாவூர் பைபாஸ் மார்க்கத்தை பயன்படுத்த வேண்டும்.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருவெறும்பூர், காவல் துணை ஆணையர் (தெற்கு), வட்டார போக்குரத்து அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய ஒரு துணைக்குழு மேற்கண்ட நடைமுறைகளை ஆய்வு செய்து காலமுறையாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்க ஏதுவாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

