Skip to content

ரூ. 3ஆயிரம்..பொங்கல் பரிசு..நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது.

ஆனால், கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள்.

இந்த சூழலில், 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்தது. இந்த அறிவிப்பை கேட்டு, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா?, ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது பொங்கல் பரிசு தொகுப்புடன் எவ்வளவு ரொக்க பணம் வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் நாளை (ஜனவரி 8-ம் தேதி) சென்னை ஆலந்தூர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!