திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் பகுதியில் பேருந்து நிலையம் இல்லாமல் இருந்ததால் அப்பகுதி மக்கள் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த 2023 24 அரசு மூலதன மானிய நிதி மூலம் திருவரங்கம் அரசு மருத்துவமனை எதிரே ரூபாய் 11.10 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023ம் வருடம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது.
இப்பணிகள் துரிதமாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று பொது பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ளே இருக்கையில் அமர்ந்தும் பேருந்துகளை கொடியசைத்தும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன்,மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, பழனியாண்டி எம்.எல் .ஏ, மாநகராட்சி ஆணையர் மதுபாலன்,
அரசு போக்குவரத்து கழக கோட்ட பொது மேலாளர் சதீஸ்குமார், நகர பொறியாளர்
சிவபாதம்,மண்டல தலைவர் ஆண்டாள் இராம்குமார், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது…
ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் நீண்ட நாள் கோரிக்கை முதல்வர் சிறப்பு நிதி கொடுத்து ஏற்கனவே 30 அடி சாலையாக இருந்தது 50 அடி சாலையாக மாற்றி உள்ளோம். காவல்துறையிடம் பேசி ஒருபுறம் பேருந்து சென்று மறுபுறம் வெளியே வருவதற்காக பேசியுள்ளோம். காலப்போக்கில் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேறு நெருக்கடி இருந்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு…
நான் திருச்சிக்காரன் என்னிடம் டெல்லி கேள்வி எல்லாம் கேட்கிறீர்கள்.
திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணியாக இருந்து கொண்டுள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் திமுக கூட்டணியை சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கிறார் அவர். என்ன முடிவெடுத்தாலும் அது சரியாக இருக்கும் எதிர்க்கட்சி கூட்டணியை பொறுத்தவரை சேருகிறார்கள் சேராமல் போகிறார்கள். மீண்டும் சேர்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் அனைவரும் சேர்ந்து இருந்த பொழுது தான் நாங்கள் வெற்றி பெற்றோம்.
யாருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்பது முதலமைச்சர் தான் முடிவு செய்வார் .யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை வெற்றி பெற செய்வோம்
அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பது தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் செய்வார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது பொங்கல் பரிசு தொகை 5000 வழங்க வில்லை ரூ.1000 தான் கொடுத்தார். மு.க ஸ்டாலின் முதலமைச்சராகி தான் பொங்கல் பரிசு தொகைக்கு நான்காயிரத்துடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து ஐயாயிரம் ரூபாய் கொடுத்தார். கடந்த முறை கொடுக்கவில்லை. இந்த முறை 3000 ரூபாய் கொடுக்க உள்ளோம். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
அதிமுக அரசால் முடியாததை நாங்கள் செய்துள்ளோம் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது என்றார்.

