மத்தியப் பிரதேச முன்னாள் உள்துறை அமைச்சரும், ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பாலா பச்சனின் மகள், இந்தூர் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தார்.
முன்னாள் அமைச்சர் பாலா பச்சனின் மகள் பிரேர்னா பச்சன். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் மூவருடன் காரில் வெளியே சென்றுள்ளார். இவர்களது கார் இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்த நிலையில், பிரேர்னா பச்சன் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த மற்றொரு இளம் பெண் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலா பச்சனின் மகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

