பாஜக 30 – 33 தொகுதிகளைத்தான் கேட்டுப் பெறும். தொகுதி கண்டறிவது பற்றி இன்னும் பேசப்படவே இல்லை. அதிமுக 160 -165 தொகுதிகளில் அதிமுக போட்டியிறுவது உறுதி. மற்ற தொகுதிகளைத்தான் மற்ற கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்.” என அதிமுகவை சேர்ந்த சேலம் மணிகண்டன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 56 தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
இந்நிலையில் நமக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் அதிமுகவை சேர்ந்த சேலம் மணிகண்டன் பேசுகையில், “6 மாதங்களுக்கு முன்பு பாஜக – அதிமுக உடன் கூட்டணி வைத்த பிறகும், சில நாட்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியுடன் யாரும் சேரவில்லை, ஒற்றை மரம் என்றெல்லாம் விமர்சித்தனர். இப்போது நடப்பது மாரத்தான் ஓட்டம். எடுத்ததுமே வேகமாக ஓடத் தொடங்கினால் கடைசியில் களத்தில் இல்லாமல் போய்விடுவீர்கள். இதுதான் எடப்பாடி பழனிசாமியின் மதியூகம். அமித் ஷாவின் வழிகாட்டல். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி, அழுத்தம் எனக் கூறினார்கள். என்னென்ன படுகேவலமாக பேசமுடியுமோ அதெல்லாம் பேசினார்கள். அமித் ஷா தமிழகம் வந்தபோது எடப்பாடி பழனிசாமி வேறு நிகழ்ச்சிகளில் இருந்தார். அதனால் பின்னர் டெல்லி வந்து சந்திப்பதாகக் கூறினார். அதிமுகவுக்கு எந்த அழுத்தமும் இல்லை. முதல் சந்திப்பிலேயே அமித் ஷா எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னது, 2026 தேர்தல் உங்களுடையது, 2029 எங்களுடையது என்பதுதான்.
அன்புமணி சரியான நேரத்தில் வந்து சேர்ந்துள்ளார். வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி வருகை உறுதியாகிவ்ட்டது. அதற்குள் அதிமுக கூட்டணி முழுமை பெறும். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும் என பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பார்.
டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் தனியாகச் சென்று கட்சி தொடங்கினார். நடத்தி வருகிறார். அதிமுக கட்சி சின்னத்தை முடக்க வேண்டும் என்றோ, கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கவேண்டும் என்றோ அவர் செயல்படவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது கடும் மனஸ்தாபம் இருந்தால் கூட அவர் கண்ணியமான அரசியலை மேற்கொண்டார். அண்ணாமலை சென்று டிடிவி தினகரனிடம் பேசி, வேப்பிலை அடித்துவிட்டார். இப்போது நீங்கள் எல்லோரும் சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி விடுவார், அதன்பிறகு உங்கள் நிலைமை அவ்வளவுதான் என வேப்பிலை அடித்துவிட்டார். அதனால் இடையில் தினகரன் வேறு மாதிரி பேசி வந்தார். டெல்லி தலைமை பேசிய பிறகு அவர் தற்போது புரிந்துகொண்டார். நிச்சயம் என்.டி.ஏ கூட்டணியில் அவர் இடம்பெறுவார். அவருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். டெல்லியில் இருந்தபடியே, ஓபிஎஸ்ஸை சேர்க்க மாட்டோம் என பல முறை சொல்லிவிட்டோம் எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி. அது செய்தியாளர்களுக்கு மட்டுமல்ல, அமித் ஷாவுக்குமான மெசேஜ். இறுதிக்கட்ட முயற்சியாக ஓபிஎஸ்ஸை கூட்டணியில் சேர்க்க பாஜக பேசியபோது, அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ்ஸை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள், அவரைப் பற்றி பேச வேண்டாம் எனத் தெரிவித்து விட்டார்.
இன்றைக்கு ஒட்டுமொத்த கட்சித் தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் திரண்டு நிற்கின்றனர். சாதாரண வெல்ல வியாபாரி, இன்றைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கிறார். உண்மையாக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் கட்சி அதிமுக. அகில இந்திய அளவில் பாஜக.

