Skip to content

“கைகள் இருந்தால்தானே காளை அடக்குவாய்” – ஜல்லிக்கட்டு வீரரை சிதைத்துக்கொன்ற மர்ம கும்பல்

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஜல்லிக்கட்டு வீரர் ஒருவரின் இரண்டு கைகளையும் துண்டித்து, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகன் இன்பரசன் (23). ஜல்லிக்கட்டு வீரரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி விற்பது, வளர்ப்பது மற்றும் காளைகளை அடக்குவது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காளைகளை வாங்குவதற்காக வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய இன்பரசன், இன்று காலை பெற்றோரிடம் கூறிவிட்டு வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

அவர் அழகாம்பாள்புரம் அரசுப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அக்கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தன்னைச் சூழ்வதைக் கண்ட இன்பரசன், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பியோடினார். இருப்பினும், விடாமல் துரத்திய அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டியது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த இன்பரசனைச் சூழ்ந்த கொலைவெறி கும்பல், “கைகள் இருந்தால்தானே ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவாய்” என்று ஆவேசமாகக் கத்தியபடி, அவரது இரண்டு கைகளையும் கொடூரமாக வெட்டித் துண்டித்தனர்.

மேலும், உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியதில் இன்பரசன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அந்த வழியாக வந்தவர்கள் உயிருக்குப்போராடிய இன்பரசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இன்பரசன் உயிரிழந்தார்.

தகவலறிந்த வல்லதரிஆக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இன்பரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் நளினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையில் இன்பரசனின் எதிரியான விக்னேஷ் உள்ளிட்ட 7 பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள விக்னேஷ் உள்ளிட்ட 7 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!