Skip to content

ஈரான்: 800 பேரின் மரண தண்டனை ரத்து – டிரம்ப் வரவேற்பு

ஈரானில் சமீபகாலமாக அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 800 போராட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் பாராட்டு மற்றும் கருத்து:
அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானில் நேற்று நிறைவேற்றப்பட இருந்த 800-க்கும் மேற்பட்டோரின் தூக்கு தண்டனையை அந்நாட்டுத் தலைமை ரத்து செய்துள்ளது. இந்த முடிவை நான் பெரிதும் மதிக்கிறேன். நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, “ஈரான் அப்பாவி போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா ராணுவ ரீதியான கடும் நடவடிக்கைகளை எடுக்கும்” என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு ஈரான் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கருதுகின்றன.

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், மரண தண்டனை நிறுத்தப்பட்டதால் அந்தப் பதற்றம் தற்போது சற்று தணிந்துள்ளது.

ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சி மாற்றத்தைக் கோரி கடந்த இரண்டு வாரங்களாகப் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இதில் இதுவரை சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் இந்த விவகாரத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று அமெரிக்காவிடம் வலியுறுத்தி வந்தன. குறிப்பாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மீதான தாக்குதலைத் தள்ளிப்போடுமாறு டிரம்பிடம் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈரான் மக்களின் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தொடர்ந்து தெரிவித்து வரும் டிரம்ப், “உதவிகள் விரைவில் வரும்” என்று மீண்டும் உறுதி அளித்துள்ளார். மேலும், ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

error: Content is protected !!