சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘காலநிலைக் கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான கல்வியறிவை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்குக் கோடைகால மற்றும் குளிர்கால இயற்கை முகாம்கள், ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் மற்றும் ‘சூழல் அறிவோம்’ என்ற விநாடி வினா போட்டிகள் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து நடத்தப்பட உள்ளன. இன்றைய நிகழ்வில், காலநிலைக் கல்வியறிவு பாடத்தொகுதிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) வழிகாட்டுதல் புத்தகங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். இதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த புரிதல் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நகர்ப்புற வெப்ப அதிகரிப்பால் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க ‘குளுமைப் பள்ளிகள்’ (Cool Schools) திட்டமும் இன்று தொடங்கப்பட்டது. ஏற்கனவே அம்பத்தூர் அரசுப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ‘குளிர் கூரை’ (Cool Roof) சோதனையில், வகுப்பறையின் வெப்ப நிலை 1.5 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்துப் பசுமைப் பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், சென்னை செனாய் நகர் மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டதுடன், சிறப்பாகச் செயல்பட்ட பள்ளிகளுக்குப் பசுமைப் பள்ளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

