மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள நகைக்கடை பஜாரில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மங்கிலால் என்ற மாற்றுத்திறனாளி இரண்டு சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளன.
பிச்சை எடுத்து வரும் மங்கிலாலுக்கு இந்தூரில் சொந்தமாக 3 வீடுகள் உள்ளன. அதுமட்டுமின்றி, 3 ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார். வெளியூர் பயணங்களுக்காக 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கார் ஒன்றை வாங்கி, அதற்குத் தனியாக டிரைவரையும் நியமித்துள்ளார். இதற்கெல்லாம் மேலாக, தான் பிச்சை எடுக்கும் அதே பஜாரில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களுக்கே அவர் வட்டிக்குத் தொழில் செய்து வருவதும், அந்தப் பணத்தைக் கண்டிப்புடன் வசூலித்து வருவதும் தெரியவந்தது. மங்கிலாலிடம் வேறு ஏதேனும் பினாமி சொத்துக்கள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

