Skip to content

கடமை உணர்வுக்குக் குவியும் பாராட்டு: ஆந்திர பெண் காவலரின் நெகிழ்ச்சிச் செயல்

ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சுக்கு, கைக்குழந்தையுடன் இருந்த பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை சீரமைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 17-ம் தேதி காக்கிநாடாவிற்கு வருகை தந்திருந்தார். இதையொட்டி ரங்கம்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஜெயசாந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தனது கைக்குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டுப் பணிக்கு வந்திருந்தார்.

பணி முடிந்த பிறகு, தனது குழந்தையை வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது காக்கிநாடா – சமர்லகோட்டா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. அந்த சமயத்தில் நோயாளி ஒருவரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம், நெரிசலில் சிக்கி மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்தது.

இதனைப் பார்த்த ஜெயசாந்தி, தான் சீருடையில் இல்லையென்றாலும் தனது கடமையை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டார். ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டே, சாலையின் நடுவே இறங்கி போக்குவரத்தைச் சீரமைத்தார். அவரது துரித நடவடிக்கையால் ஆம்புலன்ஸ் வாகனம் விரைவாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வியப்படைந்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அங்கிருந்த சிலர் இந்த நெகிழ்ச்சியான காட்சியை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கடமை உணர்வோடு செயல்பட்ட பெண் காவலர் ஜெயசாந்திக்கு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

error: Content is protected !!