Skip to content

சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதல் – 5 பெண்கள் பலி

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் பரேலா பகுதியில் உள்ள ஏக்த சவுக் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மண்ட்லா மாவட்டத்தின் பாம்ஹோரி கிராமத்திலிருந்து தூய்மைப் பணிக்காகப் பணியாளர்கள் சிலர் ஜபல்பூர் வந்திருந்தனர். அவர்கள் பரேலா பகுதியில் சாலையோரமாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காமல் அந்த கார் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரெண்டு சூர்யகாந்த் சர்மா கூறுகையில், “விபத்து நடந்த இடத்திலேயே 2 பெண்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேரில் 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 5 பேரும் பெண்கள் ஆவர்” என்று தெரிவித்தார். மேலும், சிகிச்சை பெற்று வரும் 11 பேரில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய டிரைவர் தீபக் சோனியைப் பரேலா போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம், காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மத்திய பிரதேச பொதுப்பணித் துறை மந்திரி ராகேஷ் சிங் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!