ஆந்திர மாநிலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சங்கராந்தி பண்டிகை விடுமுறை முடிந்து, மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பிய நிலையில், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) வருவாயில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் 27 கோடியே 68 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி, போக்குவரத்து வரலாற்றிலேயே ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம் மாநிலம் முழுவதும் ஏராளமான சிறப்புப் பேருந்துகளை இயக்கியது. குறிப்பாக, ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா போன்ற முக்கிய நகரங்களை நோக்கிப் பயணித்தவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. இதனால், ஜனவரி 19-ம் தேதி அன்று மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இந்த வரலாற்றுச் சாதனை குறித்து ஆந்திரப் பிரதேச அரசுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் துவாரகா கூறுகையில்,
“ஜனவரி 19 அன்று ஈட்டப்பட்ட ரூ.27.68 கோடி வருவாய் என்பது கழகத்தின் வரலாற்றில் ஒரு பொற்காலமாகும். இது போன்ற இமாலய வருவாய் இதற்கு முன் எப்போதும் ஈட்டப்பட்டதில்லை. இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் பயணிகளைத் தடையின்றி ஏற்றிச் சென்றது ஒரு பெரும் சவாலாக இருந்தது. இதனைச் சாத்தியமாக்கிய அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் கூட்டு உழைப்பைப் பாராட்டுகிறேன். அரசுப் பேருந்துகள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்த பொதுமக்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

