தமிழகத்தில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடையில் உள்ள ‘ஆனைமலையகம்’ வளாகத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய நவீன ‘டென்ட்’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை ‘ட்ரக் தமிழ்நாடு’ (TReK Tamil Nadu) மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் (TFC) ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
தற்போது இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு இன்று கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தரம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத் திட்டத்தின் கீழ் இப்பணியில் நியமிக்கப்பட்டுள்ள 20 பழங்குடியினப் பணியாளர்களுக்குச் சீருடைகளை அவர் வழங்கினார்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முன்மாதிரித் திட்டமாகச் சேத்துமடையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ட்ரக் தமிழ்நாடு மற்றும் வனத்துறையுடன் இணைந்து இயற்கையைப் பாதிக்காத வகையில் சுற்றுலாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றனர்.

