தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஆஞ்சநேயுலு, தனது மனைவி சரஸ்வதியை (34) கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதிக்கு 12 மற்றும் 9 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சரஸ்வதிக்கும், வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்த ஆஞ்சநேயுலுக்கும் இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஆஞ்சநேயுலு, பணப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி குழந்தைகளின் படிப்பையும் நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி, குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றார். கடந்த 17-ம் தேதி, “நான் திருந்திவிட்டேன்” என்று ஆஞ்சநேயுலு கொடுத்த வாக்குறுதியை நம்பி சரஸ்வதி மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் வந்த ஆஞ்சநேயுலு, சரஸ்வதியின் தலையில் கல்லால் பலமுறை தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். சரஸ்வதியின் அருகில் தூங்கிய குழந்தைகளின் ஆடைகளிலும் ரத்தம் நனைந்திருந்த நிலையில், கண்விழித்த குழந்தைகளிடம் “அம்மா தூங்குகிறார், நீங்களும் தூங்குங்கள்” எனக் கூறிவிட்டு ஆஞ்சநேயுலு தப்பியோடினார்.
குழந்தைகள் விளக்கைப்போட்டுப் பார்த்தபோது தாய் பிணமாகக் கிடப்பதைக் கண்டு கதறித் துடித்தனர். அருகில் உள்ள தாய் மாமா சுதாகருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். சுதாகர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தப்பியோடிய ஆஞ்சநேயுலு தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், “என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே” எனப் பதிவிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரைக் கைது செய்ய போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

