கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் என மொத்தம் நான்கு புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம் – தாம்பரம், நாகர்கோவில் – மங்களூரு சந்திப்பு, மற்றும் திருவனந்தபுரம் – சார்லப்பள்ளி ஆகிய வழித்தடங்களில் இந்த நவீன அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவற்றுடன் குருவாயூர் – திருச்சூர் இடையிலான பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், மத்திய அமைச்சர்கள் வி. சோமண்ணா, ஜார்ஜ் குரியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சாமானிய மக்களும் குறைந்த செலவில் நவீன வசதிகளுடன் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த அம்ரித் பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மணிக்கு 130 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த ரயில்களில், மேம்படுத்தப்பட்ட குஷன் இருக்கைகள், புஷ்-புல் தொழில்நுட்பம், பிரத்யேக மொபைல் சார்ஜிங் வசதிகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நவீன பயோ-டாய்லட்கள் என 22 பெட்டிகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக திருவனந்தபுரம் வந்தடைந்த பிரதமர் மோடி, ஓவர் பிரிட்ஜ் முதல் புத்தரிகண்டம் வரை பிரம்மாண்டமான ரோடு ஷோ நடத்தினார். இந்த விழாவின் ஒரு பகுதியாக, சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

