கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற மடாதிபதி ஒருவரை ஹனிடிராப் முறையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மடாதிபதி ஒரு கும்பலால் ஹனிடிராப் முறையில் சிக்க வைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்பூர்த்தி (25) என்ற இளம்பெண், சம்பந்தப்பட்ட மடாதிபதியின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். வேலை விஷயமாக மடாதிபதி பெங்களூரு வந்திருந்தபோது, அவரைச் சந்தித்த ஸ்பூர்த்தி, அந்த வீடியோக்களை வெளியிடாமல் இருக்க ஒரு கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். மடாதிபதி அவ்வளவு பெரிய தொகையைத் தர மறுத்த போதிலும், மிரட்டலுக்குப் பயந்து முதற்கட்டமாக 4 1/2 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.
இருப்பினும், ஸ்பூர்த்தி தொடர்ந்து மீதமுள்ள பணத்தைக் கேட்டு மிரட்டியதால், மனமுடைந்த மடாதிபதி இது குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், ஸ்பூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மடாதிபதியை மிரட்டி பணம் பறித்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் கும்பல் செயல்படுகிறதா அல்லது வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

