Skip to content

சவுக்கு சங்கர் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனினும், அவருக்குப் பல்வேறு கூடுதல் நிபந்தனைகளை விதித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த டிசம்பர் 27-ம் தேதி சங்கருக்கு மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “நீதிமன்றத்தைப் பிளாக்மெயில் செய்து பணிய வைக்க முடியாது” என்று கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் ஜாமீனை ரத்து செய்ய முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதே சமயம், சவுக்கு சங்கருக்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்தனர்.

அதன்படி, தற்போது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் குறித்துச் சமூக வலைதளங்கள் அல்லது மின்னணு ஊடகங்களில் சவுக்கு சங்கர் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக்கூடாது. சாட்சிகளை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவோ, அச்சுறுத்தவோ கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால், வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், சவுக்கு சங்கர் நீதிமன்ற நெறிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இவை தவிர, சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தலைமையில் ஒரு மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கையை வரும் பிப்ரவரி 3-ம் தேதி சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!