தர்மபுரி மாவட்டத்தில், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக, ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்களை எஸ்பி மகேஸ்வரன் வழங்கினார்.தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும், போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க, புதியதாக பொதுமக்கள் வசதிக்காகவும், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடும், மொபைல் டேட்டா டெர்மினல் (எம்டிடீ) டிவைஸ் பொருத்தப்பட்ட நவீன தொழில்நுட்படம் அடங்கிய, 9 இருசக்கர வாகனங்கள் போலீசாருக்கு நேற்று வழங்கப்பட்டது.
ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தோள் பட்டையில் நவீன கோமரா பொருத்தப்பட்டிருக்கும். நேற்று மொபைல் டேட்டா டெர்மினல் டிவைஸ் பொருத்தப்பட்ட நவீன தொழில்நுட்பம் அடங்கிய, 9 டூவீலர்களை எஸ்பி மகேஸ்வரன் போலீசாருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எஸ்பி மகேஸ்வரன் கூறுகையில், ‘டூவீலர் ரோந்து வாகனங்களில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
மேலும், 100 மூலம் பெறப்படும் அவசர அழைப்புகள் தொடர்பான புகார்களுக்கு, அர்ப்பணிப்பு ரோந்து காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள். வரும் காலங்களில் அர்ப்பணிப்பு ரோந்து வாகனங்கள் மற்றும் ரோந்து பணிகள் விரிவுபடுத்தப்படும்,’ என்றார்.

