கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை ஹனிவேலி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது குடும்பத்தினர் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். சிகிச்சையை முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டிற்குள் சென்று சோதனையிட்டபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. ஆள் இல்லாத நேரத்தைக் கண்காணித்து மர்ம நபர்கள் இந்த துணிகரத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

