Skip to content

தெலுங்கானாவில் 900 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை

தெலுங்கானாவில் கிராமவாசிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, நூற்றுக்கணக்கான தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொடூரமாகக் கொல்லப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஜெக்தியால் மாவட்டம் பெகதபள்ளி கிராமத்தில் கடந்த 22-ம் தேதி ஒரே நாளில் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டன. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் சிலருக்கு பணம் கொடுத்து இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இதுவரை 80-க்கும் மேற்பட்ட நாய்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொடூரச் செயல்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19-ம் தேதி யச்சாரம் கிராமத்தில் 100 நாய்களும், ஜனவரி தொடக்கத்தில் ஷியாம்பேட்டை மற்றும் ஆரேபள்ளி கிராமங்களில் 300 நாய்களும் கொல்லப்பட்டுள்ளன. இதேபோல் காமரெட்டி மாவட்டத்தில் 200 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலின் போது தெருநாய்கள் தொல்லையை ஒழிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே இத்தகைய படுகொலைகள் அரங்கேற்றப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

தெலுங்கானாவில் கடந்த 2019 மற்றும் 2022-ம் ஆண்டுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சித்திப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 900 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து போலீசார் கூறுகையில், நாய்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிக்காக வாயில்லா ஜீவன்கள் இவ்வளவு கொடூரமாகக் கொல்லப்படுவது நாடு முழுவதும் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

error: Content is protected !!