தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயற்குழு கூட்டத்தில் அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என விஜய் விமர்சித்ததற்கு, அதிமுக தரப்பு தற்பொழுது அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், விஜய்யின் அரசியல் அணுகுமுறை மற்றும் கடந்த காலச் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
கிளிசரின் கண்ணீரும் சுய விளம்பரமும்:சமீபத்தில் கரூரில் தவெக மாநாட்டுப் பணிகளின் போது உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் ஒரு காரணம் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல், பனையூரில் இருந்துகொண்டே ‘கிளிசரின்’ கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தியது ஒரு ‘நார்சிசிஸ்டிக்’ (Narcissistic Behavior) நடத்தை என்றும், இது மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம் என்றும் அதிமுக சாடியுள்ளது.
பனையூர் பண்ணையார்:”உலக வரலாற்றிலேயே முதல்முறையாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தேடிச் சென்று ஆறுதல் கூறாமல், அவர்களைத் தன் இடத்திற்கு வரவழைத்துப் பார்த்தது ‘பனையூர் பண்ணையார்தனம்’. இதற்காக உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்” என எள்ளிநகையாடியுள்ளது அதிமுக தலைமை. மேலும், வழக்குக்கு பயந்து 72 நாட்கள் பதுங்கியிருந்த விஜய்யா ‘வீரம்’ பற்றிப் பேசுகிறார்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
செங்கோட்டையன் விவகாரம்:அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று கூறும் விஜய், அதே ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனைத் தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என அருகில் அமர வைத்திருப்பது எந்த விதமான ‘தூய அரசியல்’ என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
ஆகப்பெரும் ஊழல்வாதி:இறுதியாக, ஊழல் குறித்துப் பேச விஜய்க்குத் தகுதியில்லை என்று குறிப்பிட்ட அதிமுக, “சினிமா துறையில் சட்டத்திற்குப் புறம்பாக பிளாக் டிக்கெட் விற்று, அதன் மூலம் பல கோடிகளைச் சம்பாதித்த விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு அதிமுக மற்றும் தவெக இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

