கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில், தனியாருக்குச் சொந்தமான மகளிர் பூங்காவை நேற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மஞ்சுவளி சவுக்கத் அலி குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். தொழில் காரணங்களால் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும், தங்களுக்குச் சொந்தமான 150 ஆண்டு பூர்வீக நிலத்தை பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்களின் நலனுக்காக மகளிர் பூங்காவாக அமைத்து வழங்க முடிவெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளப்பட்டி நகர்மன்றத் தலைவர் முனைவர் ஜான் அவர்களிடம் தங்களது

கோரிக்கையை முன்வைத்தனர். இதனை ஏற்று, மஞ்சுவளி குடும்பத்தார் சார்பில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மஞ்சுவளி மகளிர் பூங்காவில் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதை, நூலக வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மகளிர் பூங்காவின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, ரிப்பன் வெட்டி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மஞ்சுவளி குடும்பத்தாரைச் சேர்ந்த சவுக்கத் அலி முன்னிலை வகித்தார்.
விழாவில் பள்ளப்பட்டி நகர்மன்றத் தலைவர் முனைவர் ஜான் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், ஓ.எஸ்.மணி, அரவக்குறிச்சி பேரூர் கழகச் செயலாளர் பி.எஸ்.மணி, பள்ளப்பட்டி நகர பொறுப்பாளர் வசீம் ராஜா, சமூக அலுவலர்கள், மஞ்சுவளி குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக சகிதா பானு நன்றி உரையாற்றினார்.

