சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர் பேசியதாவது: உலக வரலாற்றில் தாய்மொழியை காக்க நூற்றுக்கணக்கானோர் உயிரை தியாகம் செய்த வரலாறு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மட்டுமே உண்டு. அவர்களின் தியாகங்களை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் வருடந்தோறும் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல்வரின் உத்தரவின்படி, கடந்த 2024ம் ஆண்டு இளைஞரணியால் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் 200 சிறந்த பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தற்போது மெருகேற்றப்பட்டு இந்தாண்டுக்கான பொதுக்கூட்டங்களில் பேசிய பெருமையோடு இந்த கூட்டத்தில் நான் கலந்துக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தி திணிப்பை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிற மாநிலங்கள் பாராட்டுகின்றன. மொழி உரிமை என வரும்போது தமிழகம் தான் எடுத்துக்காட்டாக உள்ளன. அதனால் தான் பாஜ போன்ற பாசிச கட்சிகளுக்கு தமிழகத்தை பார்த்தாலோ, தமிழக மக்களை பார்த்தாலோ கோபம் வருகின்றன.
புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சி செய்கிறது. இதுவே, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தால் பாஜ குட்டிக்கரணம் போட சொன்னாலும் போடுவார். அரியானா, பீகார், சட்டீஸ்கர், உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இந்தி புகுந்து அவர்களது தாய்மொழி காணாமல் போய்விட்டது. பல தாய்மொழிகளை விழுங்கிய மொழி இந்தி மொழி. அதனால் தான் தமிழக முதல்வர் எப்போதும் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டில் உறுதியோடு இருக்கிறார். இது பெரியார் மூட்டிய நெருப்பு, அண்ணா – கலைஞர் வளர்த்தெடுத்த நெருப்பு. அந்த நெருப்பு கடைசி தமிழன் இருக்கும் வரை பரவிக்கொண்டே தான் இருக்கும். இன்றைக்கு ‘தீ பரவட்டும்’ என்று கூறினால் ஒரு கூட்டம் அதனை எதிர்க்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஆறடி உயர பெரியாரின் முழு உருவச்சிலை துணை முதல்வருக்கு வழங்கப்பட்டது. இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள், கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன், பகுதி செயலாளர்கள் வை.ம.அருள்தாசன், ஏ.வி.ஆறுமுகம், புழல் நாராயணன், துக்காராமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எம்.எம்.செந்தில் நன்றி கூறினார்.

