திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில் அறிவியல் விந்தையாகக் கருதப்படும் “காளான் பாறைகள்” (Mushroom Rock) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய இந்த அபூர்வமான இயற்கை அமைப்புகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கனவே தோக்கியம் என்ற

பகுதியில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கந்திலி வட்டாரத்தில் புதூரில் மேலும் மூன்று காளான் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் காளான் பாறைகள் என்பது இயற்கையாக உருவாகும் ஒரு அபூர்வமான பாறை அமைப்பாகும். லட்சக்கணக்கான ஆண்டுகளாகக் காற்றின் தாக்கம் காரணமாக, காற்றில் கலந்துள்ள ரசாயனத் துகள்கள் மற்றும் மண் துகள்கள் பாறைகளின் மீது தொடர்ந்து மோதுகின்றன.
இதன் விளைவாக பாறையின் மென்மையான பகுதிகள் மெதுவாக உராய்ந்து அழிந்து, கடினமான பகுதிகள் மேலும் கீழுமாக அப்படியே நிலைத்திருக்கும். இதனால் பாறையின் நடுப்பகுதி மட்டும்

மெல்லியதாக மாறி, பார்ப்பதற்கு காளான் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த தனித்துவமான அமைப்பு காரணமாகவே அறிவியலாளர்கள் இதனை “காளான் பாறைகள்” என்று அழைக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து காளான் பாறைகள் கண்டறியப்பட்டு வருவது, இந்த மாவட்டத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக கந்திலி வட்டாரத்தில் மட்டும் இவ்வகை பாறைகள் அதிகமாகக் காணப்படுவது குறித்து, துறை சார்ந்த அறிவியல் வல்லுநர்கள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், இத்தகைய அரிய மற்றும் தொன்மையான இயற்கைச் சான்றுகளைப் பாதுகாக்க, மாவட்ட நிர்வாகமும் தொல்லியல் துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

