Skip to content

வீரமா காளியம்மன் கோவிலில் 200 பேருக்கு கறிவிருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி

வேண்டுதல் நிறைவேறியதால் தஞ்சை அருள்மிகு. வீரமா காளியம்மன் ஆலயத்தில் கிடா வெட்டி, பூஜை செய்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றிக் கொண்டனர் இஸ்லாமிய தம்பதியினர். தஞ்சை நாவலர் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜாகிர் உசேன். 25 வயதான இவரது மகனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். ஜாகிர் உசேன் பெரும்பாலும் இந்து மக்களிடம் அண்ணன் தம்பி அக்காள் தங்கை மாமன் மச்சான் என்று உறவு முறையில் அந்த பகுதியில் பழகி வந்துள்ளார்.

இவரது நிலைமையை அறிந்த நாவலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜாகிர் உசேனுக்கு ஆறுதல் கூறியதோடு அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயத்தில் ஜாகிர் உசேனை பிரார்த்தனை செய்து கொள்ள சொன்னார்கள் மிகவும் சக்தி வாய்ந்தது வேண்டுதல் நிறைவேற்றி தரக்கூடிய அம்மன் எனக் கூறியதால் ஜாகிர் உசேன் மனம் உருகி வீரமாகாளியம்மன் ஆலயத்தில் சென்று பிரார்த்தனை செய்துள்ளார். வேண்டுதல் படி ஜாகிர் உசேன் மகன் பூரண குணமடைந்து வீடு திரும்பியதால் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி இன்று தஞ்சை நாவலர் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வீரமாகாளியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து படையல் இட்டு பின்னர் கிடாவெட்டி அந்த பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றிக் கொண்டார். தனது மகன் குணம் ஆனதற்கு இந்த பகுதி மக்கள் தான் எனக்கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர் ஜாகிர் உசேன் தம்பதியினர்.

error: Content is protected !!