தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 77வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மழை பெய்து கொண்டிருந்த பொழுதும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் மூவர்ண நிறத்தில் பலூன்களை பறக்க விட்டார். இன்று காலை முதல் மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. இருப்பினும் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.
பின்னர் காவல்துறையை சேர்ந்த 79 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய 22 பேருக்கு சான்றிதழ் மற்றும் விருதை சாபம் உள்ளவர்கள் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த பயனாளிகள் 3 பேர், மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 7 பேர், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 பேர், மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகள், மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 6 பயனாளிகள் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.98,44,975 மதிப்பில் நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்.பி., ராஜாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் நித்யா, ,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பேபி, சுற்றுலாத்துறை வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

