Skip to content

மனைவி-மகளை தாக்கிய கணவன் கைது… திருச்சி க்ரைம்

மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது

திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவரது மனைவி ஜனனி (23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். உதயகுமார் அடிக்கடி ஜனனியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ந்தேதி ஜனனி உறையூர் பாண்டமங்கல புது வெள்ளாளர் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உதயகுமார் ஜனனியை தகாத வார்த்தைகளால் திட்டி மனைவி, மகளை தாக்கியுள்ளார். இதில் காயம் ஏற்படவே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து ஜனனி கொடுத்த புகாரின் பேரில் உரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இதற்கிடையில் லேசாக காயமடைந்த உதயகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி கருமண்டபம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக செசன்ஸ் கோர்ட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்ற திருவெறும்பூர் காவேரி நகரை சேர்ந்த சபரி ஆகாஷ் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தில்லைநகர், உறையூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக தில்லை நகர் தூக்கு மேடை தெருவை சேர்ந்த மூர்த்தி (60) உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தன் (20 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 280 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரெங்கநாதர் கோவில் கண்காணிப்பாளாரின் இரு சக்கர வாகனம் திருட்டு

திருச்சி திருவரங்கம் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் பராந்தாம கண்ணன் (வயது 52). இவர் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கண்காணிப்பாளராக உள்ளார். கடந்த மாதம் 30ந்தேதி தனது மோட்டார் சைக்கிளை திருவரங்கம் தெற்கு வாசல் காலணி குடோன் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாத்திரக்கடையில் ரூ 5 ஆயிரம் பணம் திருட்டுவாலிபர் கைது

திருச்சி தெற்கு தையல்கார தெருவை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 67) இவர் பீரங்கிகுளா தெருவில் மெட்டல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இவர் கடையில் இருந்த போது அங்கு 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் தனது வீட்டில் பழைய எவர் சில்வர் பாத்திரங்கள் விற்பனைக்காக இருப்பதாக கூறினார். இதை நம்பிய சிதம்பரம், அவருடன் வெள்ளை வெற்றிலைகார தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். மற்றொருவர் கடையிலே இருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி கடைக்கு வந்தனர். அப்போது கடையில் இருந்த மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சிதம்பரம் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ரூ 5 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வெளியில் இருந்த மற்றொருவரும் தப்பி ஓட முயன்றார். உடனே சிதம்பரம் பொது மக்கள் உதவியுடன் அவரை பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் காந்தி மார்க்கெட் எடத்தெருவை சேர்ந்த விஜய் (வயது 29 )என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெருவை சுந்தர் வேந்தன் (வயது 24) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!