கோவை, பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை வனப்பகுதியை விட்டு பகல் நேரங்களிலேயே உணவைத் தேடி குரங்குகள் மற்றும் சிங்கவால் குரங்குகள் என அதிக அளவில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகிறது.
இதனால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த குரங்குகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையில் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது எதிரே வரும் வாகனங்களில் சில நேரம் குரங்குகள் விபத்துக்குள் சிக்கி உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் வால்பாறை நகர் பகுதியில் சிங்கவால் குரங்கின் குட்டி ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அந்த குட்டியை தாய் குரங்கு தூக்கி மார்பில் அணைத்துக் கொண்டு தான் குட்டி உயிரிழந்தது கூட தெரியாமல் அங்கும் இங்கும் குட்டியை தூக்கிக்கொண்டு தாவித்தாவி செல்கிறது.
குட்டி உயிரிழந்தது கூட தெரியாமல் இந்த குரங்கு குட்டியை தூக்கிக் கொண்டு சுற்றிவரும் காட்சிகள் பார்ப்போர் மத்தியில் கண்கலங்க வைக்கும் சோக நிகழ்வாக உள்ளது.
வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதன் மூலமாகத்தான் இந்த விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதை கட்டுப்படுத்த வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வனவிலங்குகளை தொந்தரவு செய்தாலோ இல்லை அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டாலோ அவர்கள் மீது வனச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

