விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாதவர். இதற்காக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. பாஜகவை நம்பி தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸை, நம்ப வைத்து கழுத்தை அறுத்துள்ளனர். அவருடைய நிலை கவலைக்குரியதாக உள்ளது. சசிகலாவிற்கு எடப்பாடி துரோகம் செய்ததைப் போல, ஓபிஎஸ்சிடம் இருந்த பலரும் இபிஎஸ்சிடம் சென்றுவிட்டனர்.
முக்குலத்தோர் சமுதாயத்தை பாஜக பிளவுபடுத்துகிறது. டிடிவி தினகரனை சிறையில் அடைத்தனர். கூட்டணியில் இருந்து வெளியேறியவரை மீண்டும் கூட்டணியில் இணைத்துள்ளனர். இவை அனைத்தும் பாஜகவின் மோசடி வேலை. 10 நாட்களுக்கு முன் இபிஎஸ் பற்றியும், பாஜக பற்றியும் டிடிவி தினகரன் என்னவெல்லாம் விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள். விசிலை வாயில் வைத்து ஊதத்தான் முடியும், ஆனால், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு வீரர் ஒருவர் வேண்டும்; ஓடி வெற்றி பெற வேண்டும்.
தேர்தல் களத்தில்தான் தெரியும். விசில் சத்தம் ஒருவர் இருவர் ஊதினால் கேட்க நன்றாக இருக்கும், கூச்சல் போட்டால் மக்கள் வெறுப்படைந்து விடுவார்கள். மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி, அவைகளை உடைத்து ஜாதி, மதம், கருத்தியல் ரீதியாக பிளவுபடுத்தி அதில் குளிர்காயும் கட்சிதான் பாஜக. அதே முயற்சியை தமிழகத்திலும் எடுக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை, இந்த மண்ணில் பாஜக காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

